வால்பாறை: வால்பாறையில், அதிகரித்து வரும் இருவாச்சிப் பறவைகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
வால்பாறை வனப்பகுதியில் பல்வேறு பறவை இனங்கள் உள்ளன. பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 'ஹார்ன்பில்' என்றழைக்கப்படும் இருவாச்சிப்பறவைகள் அதிக அளவில் உள்ளன.
ஹார்ன்பில் பறவையின் இனப்பெருக்க காலம், பிப்., முதல் மே மாதம் வரையாகும். 30 ஆண்டு முதல் 40 ஆண்டு வரை வாழக்கூடிய இந்தப்பறவை எப்போதும் இணையுடன் தான் வெளியில் செல்லும்.வால்பாறையில், தென்மேற்குப் பருவமழை கடந்த மூன்று நாட்களாக இடைவெளி விட்டுள்ள நிலையில், இருவாச்சிப்பறவைகள் வெளியில் சுற்றித்திரிவதை, சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.

இது குறித்து, பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
தென்மாநிலங்களில், மேற்குமலைத் தொடர்ச்சியில் இருவாச்சிப் பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. உலக அளவில், 54 வகையான இருவாச்சிப்பறவைகள் உள்ளன.குறிப்பாக, இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல்நிற இருவாச்சி உள்ளிட்டவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகம் உள்ளன. பூச்சி, பழங்கள், சிறு வனவிலங்குகள் இவற்றின் உணவாகும். இருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் உள்ள பொந்துகளில் கூடு அமைக்கும்.
பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டிருக்கும்.பெண் பறவை தனது இறக்கை முழுவதும் உதிர்த்து மெத்தை போன்ற தளத்தை அமைத்து, மூன்று முட்டைகள் வரை இடும். ஏழு வாரங்கள் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும்.
குஞ்சு பொரித்த பின், பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.இருவாச்சிப் பறவை கேரளா, அருணாசலப்பிரதேஷ் மற்றும் மியான்மர் நாட்டின் மாநில பறவையாகும். அவற்றுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.