நம்பியூர் அரசுப்பள்ளி மற்றும் கல்லுாரிக்கு, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து, தினமும் ஏராளமான மாணவ, மாணவியர் பஸ்சில் வருகின்றனர். நம்பியூருக்கு நேற்று காலை, 8:30 மணிக்கு அரசு மொபசல் பஸ்சில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர் வழக்கம்போல் வந்தனர்.
அப்போது அரசு பள்ளி மாணவியரை, சில கல்லுாரி மாணவர்கள், கேலி, கிண்டல் செய்து வம்புக்கு இழுத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் இதை கண்டித்ததால், இரு தரப்பு மாணவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து சேவூர் போலீஸ் ஸ்டேசனுக்கு, கண்டக்டர்கள் தகவல் தெரிவித்தார். கூட்டப்பள்ளி என்ற இடத்தில் பஸ் நின்றிருந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை எச்சரித்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.