கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் உட்பட 4 பேருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி தென்பட்டதாகவும், அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேரின் ரத்த மாதிரிகள், புனே வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.
இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. கன்னியாகுமரில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் உரியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். ஒருவேளை தமிழகம் வரும் பயணிகளுக்கு நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்படும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.