வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : மின் வாரிய அனல் மின் நிலையங்களில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கோடி கிலோ நிலக்கரி மாயமான விவகாரத்தில், விசாரணை முடிந்து பல மாதங்களாகியும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஏன் தாமதம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.அவற்றில் தினமும் பயன்படுத்த, 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. இந்த நிலக்கரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்துதினமும் பெறப்படுகிறது.
அங்கிருந்து நிலக்கரி அனுப்புவதில் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் வாங்கப்படுகிறது.தமிழகத்தில், 2021 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மின் துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, திருவள்ளூர் மாவட்டம், வட சென்னை மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், அந்த ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆய்வு செய்தார்.
![]()
|
அப்போது, வட சென்னை மின் நிலையத்தில் பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த இருப்பிற்கும், 23.80 கோடி கிலோ நிலக்கரிகுறைவாக இருப்பதைகண்டுபிடித்தார்.இதே போல், துாத்துக்குடி மின் நிலையத்திற்கும் பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், அங்கு கொட்டி வைத்துள்ள இருப்பிற்கும், 7.20 கோடி கிலோ நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதாக, செந்தில்பாலாஜி தெரிவித்தார்.இருப்பு குறைவாக இருந்த நிலக்கரியின் மதிப்பு, 100 கோடி ரூபாய். நிலக்கரி மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, மின் வாரிய உயரதிகாரிகள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.
அக்குழு, வட சென்னை மற்றும் துாத்துக்குடி மின் நிலையங்களில் நேரடியாக விசாரணை நடத்தியது.விசாரணை அறிக்கை பல மாதங்களுக்கு முன், மின் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிலக்கரி மாயமான விவகாரம் தொடர்பாக, எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.இதனால், உண்மையிலேயே நிலக்கரி மாயமானதா அல்லது அதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட, பல்வேறுகேள்விகள் எழுகின்றன.
மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், தற்போது மின் கட்டணத்தை உயர்த்த கோரிய மனு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம்மனு மீது, பொது மக்களிடம் கருத்து கேட்டு, விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.எனவே, அதற்கு முன்னதாக மின் வாரியத்திற்கு, நிலக்கரி மாயமான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது.