சபரிமலை : சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக தேவசம்போர்டு வயலில் இருந்து நெற்கதிர்கள் நேற்று அறுவடை செய்யப்பட்டன.
மழை வந்தால் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை வரும் ஆகஸ்ட் 4, அதிகாலை 5.40 மணிக்கு நடக்கிறது. இதற்காக முந்திய நாள் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.இந்த பூஜைக்கான நெற்கதிர்கள் நேற்று தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்டன.
தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நெற்கதிர்களை அறுத்து தொடங்கி வைத்தார். பின் நெற்கதிர்கள் ஊர்வலமாக பம்பை கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தேதி பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு 4ல் பூஜை நடக்கும். மழை வலுத்தால் நெற்கதிர்கள் கொண்டு வருவதில் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே அறுவடை நடத்தியதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.