வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையையே சமாளிக்க முடியாமல், தி.மு.க., அரசு திணறி வருகிறது' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:தமிழகத்தில் பல மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என, கடந்த 28ம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதேபோல, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்துஉள்ளது.
தி.மு.க., அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த, நெல் மூட்டைகளை சரியானபடி பாதுகாப்பாக குடோன்களில் வைக்காததாலும், தார்ப்பாய் வைத்து மூடாததாலும், மூன்று நாள் மழையில், 5,000 நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன.நான் தவறுகளை சுட்டிக்காட்டும்போது, அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டி, பதில் கொடுக்கும் வேலையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
தேவைப்படும் இடங்களில், நெல் மூட்டைகளை இருப்பு வைக்க, குடோன் வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும். தேவையான தார்ப்பாய்களை வழங்கி இருக்க வேண்டும். இதை செய்திருந்தால், நெல் மூட்டைகள் சேதமடைந்து இருக்காது.கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், மழையால் பயிர்கள் பாதிப்படைந்து உள்ளன.
இதுவரை, யாரும் நேரில் பார்த்து, சேத மதிப்பை கணக்கெடுக்கவில்லை; பயிர் காப்பீட்டு திட்டம் வழியே, நிவாரணம் பெற முயற்சிக்கவில்லை.மதுரையில் 30ம் தேதி தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் கனமழை பெய்துள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. கோவில் யானையை மழை நீர் சூழ்ந்தது. மழைக்கு நான்கு பேர் பலியாகி உள்ளனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற அவலங்கள் நிகழ்ந்துள்ளன.
![]()
|
ஆட்சியில் இருப்போர், மக்களின் துன்பத்தை போக்குவர் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அ.தி.மு.க.,வினர் உடனடியாக உதவ வேண்டும்.முதல்வர் ஸ்டாலின், 'போட்டோ ஷூட்' நடத்தி, தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைத்து, மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் காட்ட வேண்டும்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.