வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டும் புதுப்பிக்கப்படும். ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்கும் பணி, நாளை மறுதினம் துவங்கி, அக்., 24 வரை நடக்கும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பரில் நடக்கும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
![]()
|
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வாக்காளர் பட்டியலில், இளைஞர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை, அதிக அளவில் தேர்தல் கமிஷன் உருவாக்கி உள்ளது. பதிவு செய்வதற்கு ஆண்டுக்கு ஒருமுறை என்பது, ஜன.,1, ஏப்.,1, ஜூலை 1, அக்.,1 என, நான்கு முறை மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், முன் கூட்டியே விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் சேகரிக்கப்பட உள்ளது.
தேர்தல் கமிஷன், வாக்காளர்பட்டியல் திருத்த படிவங்களை, வாக்காளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துள்ளது. இவை, https://eci.gov.in, https://www.elections.tn.gov.in என்ற இணையதளங்களில் உள்ளன.வாக்காளர்கள் ஆதார் எண் வழங்குவதற்கான, 'படிவம் - 6பி'யை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம். அல்லது 'NVSP, VHA' போன்ற மொபைல் போன் செயலி வழியாகவும் சமர்ப்பிக்கலாம்.
![]()
|
திருத்தப்பணி
ஓட்டுச் சாவடிகளை திருத்தி, மறு சீரமைக்கும் பணி, வரும் 4ம் தேதி துவங்கி, அக்., 24 வரை நடக்கும். ஒரே நபரின் ஒத்த பதிவுகள், ஒரே புகைப்படத்தின் ஒத்த பதிவுகள், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகள் ஆகியவை நீக்கப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ள தரமற்ற படங்களை மாற்றி, தரமான புகைப்படங்கள் வைக்கப்படும்.அக்., 25 முதல் நவ., 7 வரை, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். நவ., 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் டிச., 8 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்படும். சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஜன., 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.