சென்னை: நம் நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையிலான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, வேளச்சேரியில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து இடத்தை மீட்டெடுக்க, வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது.

வேளச்சேரி - பெருங்குடி இடையேயான, 2.5 கி.மீ., ரயில்வே சாலையில், 150 அடி அகல நீர்வழி பாதை உள்ளது. வேளச்சேரி, தரமணி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழை நீர், இந்த நீர்வழி பாதை வழியாக சதுப்பு நிலத்தை அடையும்.
ரயில்வே சாலையின் வடக்கு பகுதியில், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட, 316, 317, 656, 658 உள்ளிட்ட சர்வே எண்களில், பட்டா மற்றும் அரசு இடங்கள் உள்ளன.ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட அரசு இடங்கள், நீர்வழி பாதையில் உள்ளன. இதே நீர்வழி பாதையில், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளது. இதனால், நீர்வழி பாதையில் மழை நீர் செல்வது தடைபட்டது.
இது குறித்து, 2018ல், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தி அடிப்படையிலான வழக்கு, உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு இடங்கள் அளக்கப்பட்டன. வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை தாலுகா சர்வே எண்களை, மோசடியாக பயன்படுத்தி ஆக்கிரமித்தது தெரிந்தது.
மேலும், சோழிங்கநல்லுார் தாலுகா இடத்திற்கு, வேளச்சேரி தாலுகா பட்டா வழங்கியது வெளிச்சத்துக்கு வந்தது. இதன் அடிப்படையில், மாநகராட்சி கட்டடம் கட்ட அனுமதி வழங்கியது தெரிந்தது.அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்காததால், நீர்வழி பாதையில் நீரோட்டம் இல்லாமல், ஒவ்வொரு மழைக்கும் வேளச்சேரி வெள்ளக்காடாக மாறியது.

வருவாய்த்துறை, மாநகராட்சி இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததன் விளைவாக, இரண்டு ஆண்டில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இது குறித்து, மீண்டும் நம் நாளிதழில் செய்தி வெளியானது. ரயில்வே சாலை வடக்கு பகுதியில், வீடுகளின் ஒரு பகுதி, தடுப்புச் சுவர், தனியார் மருத்துவமனை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், நீர்வழித்தடத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையில், 2018ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு, 2022 ஜனவரி 27ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மார்ச் 31ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.கடந்த 1ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவை அடுத்து, சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, நேற்று வேளச்சேரி - பெருங்குடி ரயில்வே சாலையின், வடக்கு பகுதி ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தார்.பின்னர் கோட்டாட்சியர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் தாசில்தார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டன.சில ஆக்கிரமிப்புகள், காம்பவுண்ட் சுவராக இருப்பதால், சர்வே எல்லை அடிப்படையில் அளக்கப்பட்டன. இந்த பணி, இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதிக்குள், நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை குழப்பம்?
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் இரு தாலுகாவில் வருவதால், எல்லை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. மூத்த சர்வேயர் உதவியுடன் எல்லை நிர்ணயம் செய்து, ஆக்கிரமிப்புகளை அடையாளப்படுத்தி உள்ளோம். போலி ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
தாலுகா மாறி வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஓரிரு நாளில், போலீஸ் உதவியுடன் அனைத்து ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் இடித்து, அரசு இடம் மீட்கப்படும்.- வருவாய்த் துறை அதிகாரிகள்
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தினால், இந்தாண்டு வெள்ள பாதிப்பில் இருந்து ஓரளவு வேளச்சேரி தப்பும். இல்லையென்றால், கடும் பாதிப்புக்கு உள்ளாகும். 2018ம் ஆண்டே, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதித்திருந்தால், இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இனியாவது, அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகாமல் நேர்மையாக செயல்பட வேண்டும். வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள்
4 ஆண்டுகளாக தொடரும் இழுபறி
வேளச்சேரி நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச்னை, நீதிமன்றத்தின் தலையீடுக்குப் பிறகும், நான்கு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும், பாதிப்பு தொடர்ந்து வருகிறது.
வேளச்சேரி நீர்வழி பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவையடுத்து, 2018 செப்., மாதம், ஒரு சில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.அக்., 10ல், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, 1.50 ஏக்கர் இடத்தை மீட்டன. அதில் இருந்த, 24 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.மீதமுள்ள சில ஆக்கிரமிப்புக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகள், ஓரிரு நாளில் மீட்கப்படும் என, வருவாய்த்துறை கூறியது.
ஆனால், மீட்கப்பட்ட இடத்தை அறிக்கையாக அளித்து, மொத்த ஆக்கிரமிப்பையும் மீட்டு எடுத்ததாக, நீதிமன்றத்தில் வருவாய்த்துறை கூறியுள்ளது.ஆனால், மீதமுள்ள இடத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மீட்கப்பட்ட இடங்களை மீண்டும் ஆக்கிரமித்து, வருவாய்த்துறை வைத்த 'சீல்' உடைக்கப்பட்டது.
மாநகராட்சி நோட்டீஸ் வழங்கிய ஆக்கிரமிப்பு இடங்களில், மீண்டும் கட்டுமான பணிகள் நடைபெற்றன.ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழி பாதையை மேம்படுத்த வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த 1ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
'நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும்படி, தலைமைச் செயலர் சுற்றறிக்கை பிறப்பித்தும், அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. நீதிமன்ற உத்தரவை, 10 நாட்களுக்குள் அமல்படுத்தவில்லை என்றால், தலைமை செயலர் ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட வேண்டி வரும். 'சம்பந்தப்பட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அவர்கள் சம்பளம் பெறவும் அனுமதிக்க மாட்டோம்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பின், நான்கு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதில், அதிகாரிகள் அக்கறை காட்ட துவங்கி உள்ளனர்