கோவை : மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மனமுடைந்த கோவை ஜோதிடர், குடும்பத்துடன் விஷம் குடித்தார். இதில், அவரது தாய் இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னா, 41. இவர், ஒரு கட்சியின் ஜோதிடர் அணி பிரிவு மாநில துணைத்தலைவராக இருந்தார்.இவருக்கும், சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் கருப்பையா, 45, என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. ஊரப்பாக்கத்தில் இருக்கும் தன் சொத்து தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கருப்பையா, வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு, மாங்கல்ய பூஜை நடத்த வேண்டும் என்று ஜோதிடர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இந்நிலையில், 15 சவரன் தாலி சங்கிலி, 25 லட்சம் ரூபாயை வாங்கி, தன்னை மோசடி செய்து விட்டதாக, பிரசன்னா மீது, கருப்பையா போலீசில் புகார் தெரிவித்தார்.விசாரித்த செல்வபுரம் போலீசார், பிரசன்னா, அவர் மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்தனர்.
இதில் மனமுடைந்ததாக கூறப்படும் பிரசன்னா, அவரின் தாய் கிருஷ்ணகுமாரி, மனைவி அஸ்வினி, 8 வயது மகள் ஆகியோர், வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்து விட்டு நேற்று விஷம் குடித்தனர்.அருகே இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார். சிறுமி, பிரசன்னா, அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விஷம் குடித்த பிரசன்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:சென்னையை சேர்ந்த ஒருவர் வழக்கு கொடுத்திருக்கிறார். இந்த வழக்கால் மனம் உடைந்திருக்கிறோம். பொய்யான தகவல் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் எல்லாருக்கும் பிரச்னை உண்டாக்குகின்றனர். அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்கள் முடிவை நாங்கள் தேடிக் கொள்கிறோம். சங்கரன், கருப்புசாமி, அவர் மனைவி ஆகியோர் தான் இதற்கெல்லாம் காரணம். எங்கள் நிலை எந்த ஒரு ஜோதிடர், ஆன்மிகவாதிகளுக்கும் வரக்கூடாது. உண்மையான ஆன்மிகத்தை, ஜோதிடத்தை பற்றி தவறாக பேசுவதால் மன வேதனை அடைந்துள்ளோம். இது எங்கள் இறுதி முடிவு.இவ்வாறு தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகுமாரி வாக்குமூலத்தில், 'எங்கள் மீது புகார் தெரிவித்தவர்கள், ஆயுசுக்கும் வெளியே வரக்கூடாது' என்று தெரிவித்துள்ளார். பிரசன்னாவின் மனைவி அளித்துள்ள வாக்குமூலத்தில், 'என் கணவருக்கும், அவர் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, ஒரு வாரமாக சித்ரவதை செய்தனர். வெளியே சொல்ல முடியாத வேதனையால், இனியும் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தோம்' என்று தெரிவித்துள்ளார்.