"தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ.,) தகவல்களை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, ஊராட்சி செயலாளர்களை பொது தகவல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும்," என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிர்வாகங்களில் நடக்கும் பல்வேறு செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் பெற, தகவல் அறியும் உரிமை சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின் வாயிலாக பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.சமீபகாலங்களில், இச்சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக கிராம ஊராட்சிகள் தொடர்பான முறையீடுகள் தகவல் ஆணையத்தில் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.பொதுமக்கள் அதிகளவில் நேரடியாக செல்வது ஊராட்சி அலுவலங்களுக்கு தான். அரசு வருவாயில், 40 சதவீத நிதி ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.இப்பணிகள் குறித்தோ அல்லது நிதி ஒதுக்கீடு குறித்தோ தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் கேட்டால், உரிய பதில்கள் கிடைப்பதில்லை. பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து மாதப்பூரை சேர்ந்த தன்னார்வலர் சரவணன் கூறியதாவது: ஒன்றியங்களில் உள்ள பொது தகவல் அலுவலர்களுக்கு, ஊராட்சி செயலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மாநில தகவல் ஆணையத்தின் எந்தவொரு விசாரணைக்கும், அபராதத்துக்கும், தண்டனைக்கும் பொது தகவல் அலுவலரான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தான் ஆளாகின்றனர். இதில் ஊராட்சி செயலாளர்கள் எந்த வரம்புக்குள்ளும் வருவதில்லை என்பதால், அவர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.ஊராட்சி அளவில் தகவல் அறியும் உரிமை சட்டம் வலுப்பெற வேண்டும் எனில், ஊராட்சி செயலாளர்களை பொது தகவல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.அப்போதுதான் தகவல்களை தந்து ஒத்துழைக்காத செயலாளர்களை ஆணையம் விசாரணைக்கு உட்படுத்தவும், தண்டனை வழங்கவும் முடியும். இந்த மாற்றத்தை கொண்டுவரக்கோரி, தமிழக கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
கிராம நிர்வாக அலுவலங்களில், பராமரிக்கப்படும் பதிவேடுகளுக்கு, கிராம நிர்வாக அலுவலரே பொது தகவல் அலுவலராக உள்ளார். அதேபோல், ஊராட்சி அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை பராமரிக்கும் ஊராட்சி செயலாளர்களை பொது தகவல் அலுவலர்களாகவும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை மேல் முறையீட்டு அலுவலர்களாக நியமித்தால், தாமதமின்றி தகவல்கள் கிடைக்கும்.