எக்ஸ்குளுசிவ் செய்தி

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு, 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி வரை நீர் வரத்து உள்ளதால், அணையில் இருந்து மதகுகள் வழியாக, 1 லட்சத்து 52 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணைக்கு நேற்று 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அதில், 85 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும், 55 ஆயிரம்
 காவிரி, கொள்ளிடம், வெள்ளப்பெருக்கு , மக்களுக்கு ,எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு, 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி வரை நீர் வரத்து உள்ளதால், அணையில் இருந்து மதகுகள் வழியாக, 1 லட்சத்து 52 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.


இதனால், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணைக்கு நேற்று 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அதில், 85 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும், 55 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலும் திறந்து விடப்படுகிறது.காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முக்கொம்பு அணைக்கு நீர் வரத்தையும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வெளியேற்றப்படுவதையும், அமைச்சர் நேரு, நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் பழனியாண்டி, தியாகராஜன், அப்துல் சமது ஆகியோர் பார்வையிட்டனர்.

பின், நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கூறியதாவது:ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுப்பணி, வருவாய் துறை அலுவலர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள், ஏற்கனவே கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் இடங்களை சீரமைக்க, தேவையான மணல் மூட்டைகள், தடுப்புக் கட்டைகள் தயாராக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறியதாவது: கடந்த 1961ல் காவிரியில் 3 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்தது. 60 ஆண்டுகளுக்கு பின், இப்போது தான், 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் வரத்து உள்ளதால், அடைப்புகள் ஏற்பட்டு, வாழைத் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இப்போது தேங்கிய தண்ணீர் 4 நாட்களுக்குள் வடிந்து விடும்; பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 14 மாவட்டக் கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவுமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில், தார்ப்பாய்களால் மூடும்படியும், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதி கன மழை ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேட்டூர், வைகை அணைகளில் இருந்து, அதிகபடியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, 21.87 லட்சம் மொபைல் போன்களுக்கு, எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.கன மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலுார், திருப்பூர் மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.அப்போது, முதல்வர் கூறியதாவது:

மழையில் பயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருந்தால், உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் மாவட்டங்களுக்கு நேரில் சென்று, நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.கன மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில், உபகரணங்களுடன், பல்துறை மண்டல குழுக்களையும், மீட்பு குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை, மீனவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல், மக்கள் எதிர்பாராத நேரத்தில், தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது.குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்துவதை, தவிர்க்க வேண்டும்.


நெல் மூட்டைகள்எனவே, பாதுகாப்பான இடங்களில் உள்ள மக்களுக்கு, தரமான உணவு, குடிநீர், பால், ரொட்டி வழங்க வேண்டும். தேவைப்படும் இடங்களில், மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.அனைத்து நிலை அலுவலர்களும், கரையோரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், சில இடங்களில் மழையில் வீணாகி வருவதாக செய்திகள் வருகின்றன.நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில், தார்ப்பாய்களால் மூடப்பட வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் விழிப்பாக இருந்து, இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


53 அணைகளுக்கு நீர்வரத்து உயர்வுதென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், 53 தமிழக அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது.நீர் வளத் துறை பராமரிப்பில் மாநிலம் முழுதும் 90 அணைகள் உள்ளன. இவற்றில் மேட்டூர், முல்லைப்பெரியாறு, பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள் அதிக கொள்ளளவு கொண்டவை. தற்போது, தென் மேற்கு பருவ மழை தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடக மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், 53 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காப்பீடு செய்யாததால் சிக்கல்


டெல்டா மாவட்டங்களை மழை மிரட்டும் நிலையில், குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்யாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. இப்பருவத்தில், நான்கு லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு மே 24 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிக மழை காரணமாக, குறுவை பருவ நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. பாதிக்கப்படும் பட்சத்தில் இழப்பீடு பெறும் வகையில் காப்பீடு செய்திருக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களை வேளாண் துறையினர் தேர்வு செய்து அறிவிக்க தாமதம் ஆனது. காப்பீடு கால அவகாசம் ஜூலை 31ல் முடிந்து விட்டது. இந்நிலையில், பயிர் காப்பீடு செய்யும் நிறுவனங்களை தேர்வு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. பயிர்கள் பாதிக்கும் சூழல் இருப்பதால், காப்பீடு செய்வதற்கு நிறுவனங்கள் முன்வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 3,048 கன அடி நீர் வரத்து உள்ளது; அணையிலிருந்து, 2,028 கன அடி தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.
மதியம், 1:00 மணிக்கு, 6,300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்ததாலும், அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 50.80 அடியாக நீர்மட்டம் இருந்ததாலும், அணையின் பிரதான மூன்று மதகுகள் மற்றும் மூன்று சிறிய மதகு வழியாக, 8,150 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அணை தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் ஆகிய ஐந்து மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொது மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என, பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணியர் மற்றும் பொது மக்கள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


வாழை தோட்டத்தில் தண்ணீர்திருச்சி மாவட்டம், கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், அதன் வழியாக பெருக்கெடுக்கும் தண்ணீர், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
காவிரி ஆற்றின் இடது கரை வழியாக பெருக்கெடுக்கும் தண்ணீர், 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகளை சூழ்ந்துள்ளது. - நமது நிருபர் குழு -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Delhi,இந்தியா
05-ஆக-202215:53:29 IST Report Abuse
Sri முதலில் காவேரியை தூர் வாருங்கள், சீமை கருவேலம் மரம் மற்றும் வானளாவிய செடிகள் மண்டி கிடக்கிறது. விட்டா இன்னும் சில நாட்களில் பிளாட் போட்டு விடுவார்கள் போல. பார்க்க பார்க்க கண்ணீர் வருகிறது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஆக-202206:49:33 IST Report Abuse
Natarajan Ramanathan பயிர்கள் பாதிக்கும் சூழல் இருப்பதால், காப்பீடு செய்வதற்கு நிறுவனங்கள் முன்வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எந்த பாதிப்பும் வராது என்றால் எதற்கு காப்பீடு செய்யவேண்டும்???
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
05-ஆக-202201:39:32 IST Report Abuse
John Miller . கே ஆர் எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து அறுபது ஆயிரம் கண aடி தண்ணீரே திறந்து விடப்படுகின்றது. மீத தண்ணீர் வரும் வழியில் சேகரம் ஆகும் மழைத்தண்ணீர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X