சிவகாசி -மாவட்டத்தில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் மாணவர்கள் வகுப்பறைக்குள் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மழைநீரை வெளியேற்றி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சிறிய மழைக்கே சிவகாசியில் அம்மன்கோவில்பட்டி அரசு மேல்நிலை பள்ளி , சிவகாசி நகராட்சி மேல்நிலை பள்ளி, விஸ்வநத்தம் , திருத்தங்கல் உட்படமாவட்டத்தில் நகர், கிராமங்களில் அரசு, அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் வளாகத்தில் தளம் அமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளி வளாகத்தில் தேங்கி வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றது. இதில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.அவர்கள் அணிந்துள்ள சீருடை பாழாகின்றது. எவ்வளவு கவனமாக சென்றாலும் சகதியில் நடந்து செல்லும் மாணவர்கள் வழுக்கி விழுந்து விடுகின்றனர். ஆசிரியர்களுக்கும் இதே நிலை தான். மேலும் ஈரத்துடனேயே வகுப்பறைக்குள் வரவேண்டியுள்ளது. இதனால் கல்வி கற்கும் சூழல் மாறுபடுகின்றது.
சில பள்ளிகளில் தாழ்வாக உள்ள வகுப்பறைக்குள்ளும் மழைநீர் வந்து விடுகின்றது.உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் சற்று பெரிய மாணவர்கள் என்பதால் கவனமுடன் இருந்து கொள்வார்கள். ஆனால் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக மழைத் தண்ணீரில் விளையாடுவர். இவர்களை தொடர்ந்து ஆசிரியர்கள் கண்காணிப்பது சிரமமே. இதானல் பகலிலேயே மாணவர்கள் கொசுக்கடிக்கு ஆளாகி டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
பள்ளிக்கு வருகின்ற மாணவர்களுக்கு கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பள்ளி இருக்க வேண்டும். ஆனால் தேங்கியுள்ள மழை நீரால் அவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகின்றது. சமீபத்தில் பெய்த சிறிய மழைக்கே பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த நிலைதான். அடுத்த மழைக்காலம் துவங்குவதற்குள் மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு, அரசு பள்ளிகளின் வளாகத்தை சீரமைத்து, தண்ணீர் வெளியேற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.