அன்னுார்:அன்னுார் மற்றும் சூலூரில், 12 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையான, ஒரு கிலோ 105 ரூபாய் 90 காசுகளுக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அன்னுாரில் கடந்த ஜூன் 5-ம் தேதியும், சூலூரில் ஜூலை முதல் வாரத்திலும் கொப்பரை கொள்முதல் துவங்கியது. இரண்டு மையங்களிலும், கடந்த 3ம் தேதியோடு கொள்முதல் முடிவு பெற்றது.இதுகுறித்து அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில், "அன்னுார் மற்றும் சூலூரில், 12 கோடியே 90 லட்சத்து 60 ஆயிரத்து 330 ரூபாய்க்கு தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 24 ஆயிரத்து 374 மூட்டைகளில் உள்ள, 1,218 மெட்ரிக் டன் கொப்பரைகள் கோவையில் உள்ள கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது," என்றார்.இது குறித்து அன்னுார் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தேங்காய் விலை மிகக் குறைவாக உள்ளது. இதனால் பல ஆயிரம் தென்னை விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை தான் விவசாயிகளுக்கு ஓரளவு ஆதரவாக உள்ளது. எனினும் கடந்த, 30ம் தேதியோடு கொள்முதலை நிறுத்தி விட்டனர். இதனால் பல ஆயிரம் விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.வெளிச்சந்தையில், ஒரு கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே விற்பனைக்கு வாங்குகின்றனர். மரத்தில் ஏறி காய் பறித்தல், மட்டை உரித்தல், தேங்காய் உடைத்து, கொப்பரையை எடுத்து உலர வைத்து கொண்டு செல்லும் போது வெளிச்சந்தையில் எந்த லாபமும் கிடைப்பதில்லை.மத்திய, மாநில அரசுகள் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் அடங்கலின்படி ஒரு ஏக்கருக்கு 216 கிலோ கொப்பரை மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதை, 400 கிலோவாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்,' என்றனர்.