கூடலுார்:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பல நாட்களாக கன மழை பெய்தும்,அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரிக்கவில்லை.
இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளை 'ட்ரோன் கேமரா' மூலம் கண்காணிக்க மத்திய நீர்வளத் துறை முன்வர வேண்டும் என பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:ஒரு மாதமாக மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆனால், பெரியாறு அணையில் மட்டும் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தாண்டவில்லை.
நேற்று மாலை 6 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஒரே நீர்பிடிப்பு பகுதியில் உள்ள மற்ற அணைகள் நிரம்பி வரும் நிலையில் பெரியாறு அணையில் மட்டும் நீர்வரத்து அதிகரிக்காதது தமிழக விவசாயிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்ச், சபரி கிரி, பிளீச்சிங் ஆகிய மூன்று தடுப்பணைகள் மூலம் பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை திசை மாற்றி இடுக்கி அணைக்கு கொண்டு செல்லப்படுவது அம்பலமாகியுள்ளது. இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே கேரளா இதுபோன்ற செயலில் இறங்கியுள்ளது.
அதனால் ட்ரோன் கேமரா மூலம் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளை மத்திய நீர்வளத் துறை ஆய்வு செய்ய வேண்டும். இதனை கண்காணிக்க கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிட வேண்டும். கேரளா சட்டவிரோதமாக செய்திருந்தால் சட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.