உடுமலை:நாட்டின் 75 வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தையொட்டி உடுமலையில் ஒரே நேரத்தில், 75 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.நாடு முழுவதும் 75 சுதந்திர தினம், அமிர்த விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலையில், அனைத்து தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, 75 இடங்களில், 75 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக, சுதந்திர போராட்ட தலைவர்களை நினைவு கூறும் வகையிலும், மாணவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அந்த வரிசையில், கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி மகளிர் கலைக் கல்லுாரி சார்பில், '75 பள்ளிகள், 75 மாணவர்கள், 75 நிமிடங்கள்' என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் 75 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.தவிர, வரும், 8 முதல் 15ம் தேதி வரை, இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி, உடுமலை தேஜஸ் அரங்கில் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இந்திய விஞ்ஞானிகள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் குறித்த பட கண்காட்சியும் இடம்பெறுகிறது.மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, 'இந்தியாவை 2047-இல் வல்லரசாக்க என் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி; 'கனவு இந்தியா 2047' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி; '2047 இல் இந்தியாவை வல்லரசாக்க என் முழக்கம்' என்ற தலைப்பில், 'ஸ்லோகன் எழுதுதல்' போட்டியானது, வரும், 10ல், மதியம், 2:00 மணிக்கு, நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை 8778201926 மொபைல்போன் எண் மற்றும் udt75eventsceleb@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.