தாண்டிக்குடி --தாண்டிக்குடி - - வத்தலக்குண்டு ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூடை அடுக்கும் பணி மழையால் தாமதம் ஆகிறது. கனமழையால் பட்லங்காடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது பட்லங்காடு பிரிவு வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. எஞ்சிய 4 கி.மீ., தொலைவை மக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது.ஆத்துார் நெடுஞ்சாலைத்துறையினர் நிலச்சரிவு பகுதியில் 10 ஆயிரம் மணல் மூடைகளை அடுக்கும் பணியை மேற்கொண்ட போதும் , மேலும் 10 ஆயிரம் மூடைகள் அடுக்கினால் மட்டுமே தற்காலிக போக்குவரத்தை துவக்க முடியும். இரு தினங்களாக மலைப்பகுதியில் இடைவிடாது மழை பெய்வதால் இப்பணி சுணக்கமடைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் இரவு, பகலாக பணிகளை செய்த போதும் மழை குறுக்கிடுவதால் பணிகளை துரிதப்படுத்த முடியாத சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பரத் ஆகியோர் மணல் மூடை அடுக்கும் பணியை ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில்,' ஓரிரு தினங்களில் பணிகள் முடிவுற்று போக்குவரத்து துவக்கப்படும்,' என்றனர்.
மழையில் இரு வீடுகள் சேதம்
கொடைக்கானல்: நேற்று முன்தினம் பெய்த மழையால் வில்பட்டி ஊராட்சி உப்பு பாறை மெத்து பகுதியில் சுப்பிரமணி வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்தது. லேசான காயத்துடன் தப்பினர். வட கவுஞ்சிப் பகுதியில் சுப்பிரமணி அருள்ராஜ் வீடு மழையால் இடிந்தது. *பழநி : பழநி பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, மானுார், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. பழனி கொடைக்கானல் சாலை புளிய மரத்து செட் அருகே ரோட்டில் மரம் விழுந்தது. நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயபாலன் தலைமையிலான குழுவினர் போக்குவரத்தை சரி செய்தனர். காலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரி அலுவலகம் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். கோம்பை பட்டி பெரியதுறையான் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.