உடுமலை:பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக் கட்டடம் மற்றும் வளாகத்தில், தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. கட்டடங்கள் மற்றும் ரோட்டோரங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, பலருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல, பள்ளிகள்தோறும், சுத்தப்படுத்தும் பணிக்கு தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக, பள்ளிக் கட்டடங்களின் மேற்பரப்பில் குப்பை இல்லாதவாறும், மழைநீர் வழிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் துாய்மைப் பணியாளர்கள் கிடையாது. கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகளில் மட்டும் துாய்மைப் பணி மேற்கொள்ள அந்தந்த ஒன்றியங்கள் வாயிலாக, 2,250 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அந்த தொகையும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள், சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட முன்வருவதில்லை.இதனால், வெளியில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து, துாய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அதற்கான சம்பளத்தை அளித்து வருகின்றனர். இதேபோல, மழைநீர் தேங்கினால், மாணவர்கள் உதவியுடன் மட்டுமே அப்புறப்படுத்தப்படுகிறது. அந்தந்த உள்ளாட்சி வாயிலாக துாய்மைப் பணி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.