உடுமலை:சமையல் எண்ணெய் உற்பத்திக்கான எண்ணெய் வித்து தேவை அதிகரித்துள்ளதால், அச்சாகுபடிக்கும், விதைப்பண்ணை அமைக்கவும் உடுமலை பகுதி விவசாயிகள் முன் வர வேண்டும் என, அங்ககச் சான்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பல்வேறு காரணங்களால், நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. சாகுபடி செலவு அதிகரிப்பு, விற்பனை வாய்ப்புகள் இல்லாதது போன்ற பிரச்னைகளால், இவ்வகை சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், எண்ணெய் வித்து சாகுபடியை ஊக்குவிக்க, விதைப்பண்ணை அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில், உடுமலை ஆண்டியகவுண்டனுார் பகுதியில் நிலக்கடலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையை, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:தானிய பயிர்களுக்கு அடுத்து, மிக முக்கியமானது எண்ணெய் வித்து பயிர்களாகும். கடந்த, 1990ல் மஞ்சள் புரட்சியின் காரணமாக, நம் நாடு எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. ஆனால், இந்நிலை சில காலம் மட்டுமே நீடித்தது. உலக அளவில் எண்ணெய் வித்து உற்பத்தியில், நம் நாடு, 5வது இடத்தில் உள்ளது. சமையல் எண்ணெய் மட்டுமல்லாமல் பல்வேறு விதங்களில் தினசரி எண்ணெய் நுகர்வு அதிக அளவில் உள்ளதால், இறக்குமதியை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், நிலக்கடலை, சூரியகாந்தி, கடுகு போன்ற எண்ணெய் வித்துப்பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்வம் இருந்தாலும், இது லாபகரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.இந்தியாவில், ஏறத்தாழ 260 லட்சம் ஹெக்டர் பரப்பளவில், எண்ணெய் வித்து சாகுபடி செய்யப்பட்டு, 30 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெய் வித்து சாகுபடியில் அதிக வருவாய் கிடைக்கும்.சாகுபடி பரப்பை அதிகரிக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிக வருவாய் கொடுக்கும் எண்ணெய் வித்து பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.எந்தப் பயிராக இருந்தாலும் அதிக மகசூல் பெறுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது விதைத் தேர்வும் சில அடிப்படை தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதும் ஆகும்.நிலக்கடலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தரமான, திரட்சியாக, அதிக மகசூல் தரவல்ல, பூச்சி நோய் எதிர்ப்பு உள்ள சான்று பெற்ற விதைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், சிறப்பான குணாதிசயங்கள் கொண்ட வி.ஆர்.ஐ., 8,கோ 6, தரணி போன்ற ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அதனைப் பெற்று பயன்படுத்தலாம்.மார்கழி பட்டம் உடுமலை வட்டாரத்தில் ஆண்டிய கவுண்டனூர் பகுதியில் தரணி ரக நிலக்கடலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரகம் 105 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கருக்கு சராசரியாக 1,500 கிலோ மகசூல் தரக் கூடியது. இந்த விதைப்பண்ணை வாயிலாக மார்கழிப் பட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை வழங்க முடியும்.மேலும் விதைத் தேவை உள்ள விவசாயிகள் மற்றும் விதைப் பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்து வினியோகம் செய்ய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுவும் முக்கிய காரணம்
உடுமலை செல்லப்பம்பாளையம், உடுக்கம்பாளையம், ஆண்டியூர், தேவனுார்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரியாகவும், பி.ஏ.பி., பாசனத்துக்கும் நிலக்கடலை பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த காட்டுப்பன்றிகளால், நிலக்கடலை சாகுபடி கடும் சேதத்தை சந்தித்தது. அறுவடை காலத்தில், ஏற்பட்ட சேதம் காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்; நிவாரணமும் கிடைக்கவில்லை. பலர் மாற்றுச்சாகுபடிக்கு சென்று விட்டனர். இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுத்தால், எண்ணெய் வித்து பயிர் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.