மூணாறு -இடுக்கி மாவட்டத்தில் மழை வலுவடைந்துள்ள நிலையில் தேவிகுளம் தாலுகாவில் பேரிடர் முன் ஏற்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ.ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.தேவிகுளம் சப் -கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சப் -கலெக்டர் ராகுல் கிருஷ்ணாசர்மா, தாசில்தார் யாசர்ஹான்,மக்கள் பிரதிநிதிகள், அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தேவிகுளம் தாலுகாவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு, மண்சரிவு, இறப்பு ஆகியவற்றை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.அதேபோல் பேரிடர் முன் ஏற்பாடுகள் தொடர்பாக தாலுகா அளவிலும், ஊராட்சிகள் தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அவசர கால நிவாரண முகாம்கள் அமைத்தல், மண்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகள், ஊராட்சிகளில் மீட்பு படையினரின் செயல்பாடு, ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை, தொலை தொடர்பு வசதி ஆகியவை உறுதிசெய்யப்பட்டது. தற்போது தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை 24 மணி நேரம் செயல்பட்டு வரும் நிலையில் அவசர காலத்தில் அனைத்து துறையினரையும் ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. பீர்மேடு தாலுகாவில் பேரிடர் முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ. வாழூர் சோமன் தலைமையில் நடந்தது.