கம்பம்,-.மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருளி அருவியில் குளிக்க விதித்த தடையும் தொடர்கிறது. தேனி மாவட்டத்தில் ஒரு மாதமாகவே சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பெய்த மழை நேற்று பகலிலும் தொடர்ந்தது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1866 கனஅடி நீர் விடுவிக்கப்படுகிறது. இது தவிர சுருளி அருவி, இரவங்கலாறு தண்ணீர், மற்றும் இதர காட்டாற்று ஒடைகளிலிருந்து வெளியேறும் வெள்ளமும் சேர்ந்து 2700 கன அடி நீர் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
சுருளி அருவியிலும் வெள்ளப் பெருக்கு : 'சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு தொடர்கிறது. மேகமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் அருவிக்கு நேற்று காலை முதல் கூடுதல் தண்ணீர் வரத்து துவங்கியது. இதனால் அருவியில் குளிக்க விதித்த தடையை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.வருவாய்த்துறை மெத்தனம் : முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. மழையும் தொடர்வதால் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்ய வேண்டும். ஆனால் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் தாலுகா நிர்வாகம் மெத்தனமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.