தேனி,- -பாரம்பரிய மிக்க 27 மூலிகை செடிகளையும், அதன் பயன்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு கற்பித்து அந்த செடிகளை வளர்க்க பள்ளிகளில் மூலிகைத் தோட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.' என, மாவட்ட பள்ளிக் கல்வி சுற்றுச்சூழல் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், தனியார், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் 941 உள்ளன. இதில் 250 பள்ளிகளில் பசுமைப்படை சங்கம், 381 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு அமைப்பிலும் குறைந்த பட்சம் தலா 30 முதல் 50 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடர்வன குறுங்காடு வளர்த்தல், மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு, மூலிகைத் தோட்டம் அமைத்தல், விழிப்புணர்வு கருத்தரங்குகள், மழைநீரின் சேமிப்பு, குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். தினமலர் நாளிதழின் 'அன்புடன் அதிகாரி' பகுதிக்காக மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறியதாவது:சுற்றுச்சூழல் மன்றங்களில் நோக்கம் மனிதர்களுக்கு ஆக்சிஜன் இன்றியமையாத தேவை. அதனால் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, மாணவர்களுக்கு சூழல் பாதுகாப்பு, மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது முக்கிய நோக்கமாகும்.எத்தனை மரக்கன்றுகள் நடவு செய்துள்ளீர்கள் கடந்தாண்டில் நிழல் தரும் மரங்களாக 964 மரக்கன்றுகள் நட்டு தொடர் பாராமரிப்பில் உள்ளதை ஆவணப்படுத்தி உள்ளோம் .
நடப்பாண்டில் கொரோனாவால் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்பாடுகள் 2 மாதங்களுக்கு முன் துவக்கினோம். மாணவர்களுக்கு மரக்கன்றுகளை தேர்வு செய்தல் அதன் தாவரவியல் பெயர்களை அறிய செய்தல், பராமரிக்க பொறுப்பாளர்களை நியமித்து கற்பித்து வருகிறோம். பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்யாமல், நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க கற்பித்து வருகிறோம். உதாரணத்திற்கு புங்கை, பூவரசு, மேம்பு, புளி, தேக்கு, மஞ்சள் மூங்கில் ஆகியவை ஆக்சிஜன் அதிகம் வெளியேற்றும்.இந்த மரவகைகளை நட்டு வளர்க்க வலியுறுத்தி வருகிறோம்.மூலிகைத் தோட்டங்கள் பற்றி மூலிகைத்தோட்டங்களை பள்ளிகளில் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். அதில் கற்பூரத்துளசி எனும் திருநீற்றுபச்சிலை, கரிசலாங்கண்ணி (மஞ்சள், வெள்ளை), வெட்டுக்காயங்களை குணப்படுத்தும் மூக்குத்திப்பூ, புதினா, எலும்பொட்டி (நிறுவனங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் செடி), பூனை மீசை செடி, ரணக்கள்ளி உட்பட 27 மூலிகைச் செடிகளை வகைப்படுத்தி அதன் பயன்களை மாணவர்களுக்கு கற்பித்து சுற்றுச்சூழல் மன்றங்கள், பசுமைப்படை மூலம் பள்ளிகளில் மூலிகை தோட்டங்கள் அமைக்க அறிவுறுத்தி உள்ளோம்.
இதற்கான பணிகள் தற்போது நடக்கும் தேர்வுகள் முடிந்த பின் துவங்கும்.விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்துஉலக பூமி தினம், இயற்கை பாதுகாப்பு தினம், சுற்றுச்சூழல் தினங்கள், பிற பண்டிகை நாட்களில் பள்ளி பகுதிகளில் பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளில் அடர்வன குறுங்காடுகள் அமைக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்து வருகிறோம். கலெக்டர், சி.இ.ஓ., பரிந்துரையில் பள்ளிக்கல்வி இயக்குனர் மூலம் அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்றார்.