கோவை:பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில், அவிநாசிலிங்கம் பள்ளி அணி ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.எஸ்.என்.எஸ்., கல்விகுழுமம் மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 130 பள்ளிகளை சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். ஆறு முதல், 19 வயதுடைய மாணவ, மாணவியருக்கு, 75மீ., 100மீ., 200மீ., 400மீ., 600மீ., தடையோட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.மாணவியர் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற அவிநாசிலிங்கம் பள்ளி அணியும்; மாணவர்கள் பிரிவில் ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன. தொடர்ந்து அதிக புள்ளிகள் பெற்ற அவிநாசிலிங்கம் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அருணாசலம் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி முதல்வர் சார்லஸ், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.