தேனி -தேனியில் ஊராட்சி செயலர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து திருமலாபுரம் ஊராட்சி தலைவர் கனிராஜாவின் காசோலையில் கையெப்பமிடும் அதிகாரத்தை கலெக்டர் ரத்து செய்தார். தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம் முன்,ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், திருமலாபுரம் ஊராட்சி தலைவர் கனிராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநில பொருளாளர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் ஊராட்சி செயலர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து மாநில தலைவர் கூறுகையில், 'நிர்வாக குளறுபடி ஏற்படுத்தும் பி.டி.ஓ. சேதுக்குமார், ஏ.பி.டி.ஓ.,சிவக்குமார், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் திருமாலாபுரம் ஊராட்சி தலைவர் கனிராஜா மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டது. சேதுக்குமார் , சிவக்குமார் பணி மாற்றம் செய்யப்பட்டனர். நேற்று கனிராஜா மீது நடவடிக்கைக கோரி காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். இதனை தொடர்ந்து திட்ட இயக்குனர், கலெக்டருடன் பேசி, ஊராட்சி தலைவர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை கலெக்டர் ரத்து செய்தார்' என்றார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.