கோவை:ஒண்டிப்புதுார் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த நீர், 'பம்ப்' செய்யப்பட்டு, காடுகுட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தில், நாளொன்றுக்கு, 6 கோடி லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கலாம். சுத்திகரித்த நீரை, விளைநிலத்துக்கும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் உபயோகிக்கலாம். ஆனால், நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது.அந்த தண்ணீரைக் கொண்டு, வறண்டு காணப்படும் குளம், குட்டைகளை நிரப்ப வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்ற பொதுப்பணித்துறை, ஒண்டிப்புதுாரில் நொய்யல் ஆற்றங்கரையில் நீருந்து நிலையம் கட்டி, செட்டிபாளையம் அருகே உள்ள காடுகுட்டை வரை, குழாய் பதித்து, சுத்திகரித்த நீரை, 'பம்ப்' செய்து கொண்டு செல்ல திட்டமிட்டது.சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பட்டணம் வழியாக, 5 கி.மீ., துாரத்துக்கு இரும்பு குழாய் பதிக்கப்பட்டது. மோட்டார் அறை கட்டப்பட்டு, 125 எச்.பி., திறனுள்ள மோட்டார் பொருத்தப்பட்டது; மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது.மோட்டார் நிறுவி வெகுநாட்களாகி விட்டதால், ஜெனரேட்டர் இயக்கி, குட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தடையின்றி தண்ணீர் வந்ததால், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காடுகுட்டை நிரம்பியதும் அடுத்தடுத்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். பம்ப் ஹவுஸ்க்கு இலவச மின் இணைப்பு கேட்டிருக்கிறோம்; மின் வாரியம் தாமதித்து வருகிறது' என்றனர்.