மூணாறு, -இடுக்கி மாவட்டத்தில் அதிதீவிர மழை பெய்வதால் கட்டுப்பாடுகளை தொடர்வது என கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிதீவிர மழை தொடர்வதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து உயர் அதிகாரிகளுடன் கலெக்டர் ஷீபாஜார்ஜ் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.அதன்பின் கலெக்டர் கூறியதாவது., மாவட்டத்தில் ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு பயணத்திற்கும், சுற்றுலா பகுதிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை தொடரும். நீர் நிலைகள் அருகே செல்பி எடுத்து வலைதளங்களில் பதிவிடுவோர், பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் அணை பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.மலங்கரை, குண்டளை, லோயர் பெரியாறு, பொன்முடி, கல்லார்குட்டி ஆகிய அணைகள் திறக்கப்பட்டு இடுக்கி அணையில் முதல்கட்ட முன்னெச்சரிக்கை புளூ அலெர்ட் விடுக்கப்பட்டது. அணைகளில் நீர்மட்டம் உயர்வதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. மழை தொடரும்பட்சத்தில் அணைகளை திறக்கும் சூழல் ஏற்பட்டதால் அதற்கு தேவையான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என்றார்.