பல்லடம்;பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் திறந்த நிலையில் உள்ள செப்டிக் டேங்க் குழி, காவு வாங்க காத்திருக்கிறது. இதில், தவறிவிழுந்த சிறுவன் மண்டை உடைந்தது.பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஏ.டி., காலனியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொது கழிப்பிடத்துக்கு புதிய செப்டிக் டேங்க் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தோண்டப்பட்டுள்ள குழி மூடப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்பொதுமக்கள் கூறுகையில், ''புதிய செப்டிக் டேங்க் அமைப்பதற்காக குழி தோண்டி ஒரு மாத காலம் ஆகிறது. பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இன்றி தோண்டப்பட்ட குழி திறந்த நிலையில் உள்ளது. இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், குழியில் தவறி விழுந்து மண்டையில் ரத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்களாக திறந்த நிலையில் உள்ள இக்குழியால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, செப்டிக் டேங்க் பணிகளை விரைந்து முடித்து ஆபத்தான குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.