திருப்பூர்;நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டுகிறது. ஆற்றங் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மற்றும் அருகாமையில் உள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.அணைக்கு வினாடிக்கு, 2,310 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அணை மொத்த கொள்ளளவான 90 அடியில், நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 88.26 அடியாக இருந்தது. உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், கரையோர பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.கலெக்டர் வினீத் அறிக்கை:அமராவதி அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்வதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன், முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாக இருக்கவேண்டும்.ஆற்றில் இறங்குவது, குளிப்பது, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை நீர் நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது. ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.