மேலுார் -மேலூரில் அரசு கல்லுாரி விடுதி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவர் பால்பாண்டி 20, காயமுற்றார். விடுதி முழுவதும் சிதிலமடைந்துள்ளதால் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. இக்கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதி மேற்கூரையில் வெடிப்பு ஏற்பட்டு மழை நீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இங்குள்ள 15 அறைகளிலும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. நேற்று விருதுநகர் மகாராஜபுரம் பொருளியல் 3ம் ஆண்டு மாணவர் பால்பாண்டி மீது பூச்சு பெயர்ந்து விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. 7 தையல் போடப்பட்டுள்ளது. விடுதி கழிப்பறைகளின் முன்பகுதியை மறைத்து சமையல் மாஸ்டர் பாண்டி ஆட்டுத் தொழுவமாக மாற்றியதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். விடுதியில் பராமரிப்பின்றி மரங்கள் முளைத்தும், சுவர்கள் வெடித்தும் காணப்படுகின்றன. மாணவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கியுள்ளோம். கல்லுாரி துவங்கப்பட்டு 16 நாட்களாகியும் சாப்பாடு வழங்கவில்லை என்பதால் நாங்களே சமைத்து சாப்பிடுகிறோம் என்றனர். முதல்வர் மணிமேகலாதேவி கூறுகையில், ''கட்டடம் சிதிலமடைந்தது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். கழிப்பறையை மறைத்து ஆடுகளை கட்டியது தவறு. இதுகுறித்து விசாரிக்கப்படும்'' என்றார்.