திருப்பூர்:பயறு வகை உற்பத்தியை அதிகரிப்பதற்காக, 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், துவரை, உளுந்து, பாசிபயறு, கொள்ளு, கொண்டை கடலை அவரை, மொச்சை, நரிப்பயறு உள்ளிட்ட பயறுவகைகள், 20 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.பயிறு வகைகள் அபிவிருத்தி திட்டம் மூலம், சாகுபடி பரப்பு மற்றும் விளைச்சலை அதிகரிப்பதற்காக, நடப்பு ஆண்டு, 63.158 லட்சம் ரூபாய் மதிப்பில் மானிய உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைப்பதற்கு, எக்டருக்கு, 7,500 ரூபாய் மானியம், உடுமலை மற்றும் தாராபுரம் வட்டார பகுதிகளுக்கு 50 எக்டருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மூலனுார், குண்டடம் வட்டார பகுதிகளில், பயிறு தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க 50 எக்டருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பயிறு வளர்ச்சியை ஊக்குவிக்கும்வகையில், நுண்ணுாட்ட சத்து வினியோக இனத்தில் 50 சதவீதம் அல்லது எக்டருக்கு 500 ரூபாய், என, 400 எக்டருக்கு மானியம்; உயிர் உரங்கள் வினியோக இனத்தில், 50 சதவீதம் அல்லது 300 ரூபாய் என, 1,735 எக்டருக்கு மானியம். பயிர் பாதுகாப்பு மருந்துகள் வினியோகம் செய்ய, 50 சதவீதம் அல்லது 500 ரூபாய் என, 510 எக்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது.பண்ணை கருவிகளான ரோட்டவேட்டர் வினியோக இனத்தில், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் அல்லது 34 ஆயிரம் ரூபாய்; குறு, சிறு, மலை வாழ் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது 42 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.பேட்டரி தெளிப்பான்களுக்கு, இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது மூவாயிரம் ரூபாய்; சிறு, குறு, மலை வாழ் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது 3,800 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு, வட்டார அளவில் அந்தந்த வேளாண்மை உதவிய இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.