கோவை;'மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், சர்வதேச சந்தையில் ஜவுளி ஆதிக்கத்தை நம் நாடு மீண்டும் ஏற்படுத்தும்' என, ஜவுளித்தொழில் கூட்டமைப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர்.சில நாட்களுக்கு முன், பருத்தி சார்ந்த அனைத்து தரப்பினர் கூட்டத்தை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ்கோயல், டில்லியில் நடத்தினார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மனோஜ் குமார் பட்டோடியா, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் ரவி ஷாம் ஆகியோர் கூறியதாவது:ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும், இந்திய பருத்தி மற்றும் ஜவுளி தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தவும், அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்த ஜவுளி தொழிலின் முழுமையான வளர்ச்சிக்கான பணியில் ஒன்றிணைவர்.விவசாய நிலம் முதல் தொழில் வரை பரிசோதனை வசதிகள் மற்றும் சுத்தமான மாசில்லாத பருத்தி உற்பத்தி ஆகியவை விரைவில் இந்திய பருத்தி மற்றும் அதன் ஜவுளி தயாரிப்புகளை மற்ற சர்வதேச பருத்திக்கு இணையாக முத்திரை பதிக்க உதவும்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா ஒப்பந்தம் செய்துள்ளதால். அதன் மூலம் மிகப்பெரிய வாய்ப்பு உருவாகும். ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை மூலம் வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்.தரமான பருத்திக்கு தேவை மேலும் அதிகரிக்கும். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மேற்கொண்ட முயற்சி சர்வதேச சந்தையில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வரும். சரியான விதைகளை பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகளால், மகசூல் மற்றும் விவசாயிகளின் லாப வரம்புகள் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.