இந்திய நிகழ்வுகள்
![]()
|
'ஹெல்மெட்' அணியாதஎம்.பி.,க்கு அபராதம்
புதுடில்லி-நாட்டின், 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி பா.ஜ., சார்பில், புதுடில்லியில் நேற்று முன்தினம் இரு சக்கர வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பா.ஜ., பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். டில்லியைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரியும் இதில் பங்கேற்றார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றார். இதையடுத்து, டில்லி போக்குவரத்து போலீசார், மனோஜ் திவாரிக்கு அபராதம் விதித்தனர். ஆனால் அபராத தொகை குறித்த விபரம் தெரியவில்லை. மனோஜ் திவாரி கூறுகையில், ''ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக வருந்துகிறேன். போலீசார் விதித்துள்ள அபராத தொகையை கட்டாயம் செலுத்துவேன்,'' என்றார்.
ஆயுத 'சப்ளையர்'டில்லியில் கைது
புதுடில்லி-டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆயுதங்கள் 'சப்ளை' செய்த 24 வயது வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துருவ், 24. இவர், புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆயுதங்கள் சப்ளை செய்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டு களில், 400க்கும் அதிகமான துப்பாக்கிகளை இவர் சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பாளரிடம் இருந்து, துருவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், தென்கிழக்கு டில்லி அருகே, துருவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 துப்பாக்கிகள், ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழக நிகழ்வுகள்
கஞ்சா விற்றவர்கள் கைது
திருப்பூர்:தாராபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சந்தேகப்படும் விதமாக சுற்றி திரிந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.தாராபுரத்தை சேர்ந்த மீரான்கனி, 41, குமார், 32 என்பது தெரிந்தது. விற்பனைக்காக வைத்திருந்த, ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, இருவரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
கோவை;கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் தலைமையில், ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.கணபதி கட்டபொம்மன் தெருவில் ரேஷன் அரிசி பதிக்க வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கணபதி மற்றும் ரத்தினபுரி சுற்று வட்டார பகுதி மக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசி கொள்முதல் செய்து, வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பது, விசாரணையில் தெரியவந்ததுஅரிசி பதுக்கி வைத்திருந்த ஹபிபுல்லா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
![]()
|
ஆசிரியர் தம்பதி உட்பட 2 வீடுகளில் திருட்டு
அவிநாசி:அவிநாசி அருகே ஆசிரியர் தம்பதி உட்பட 2 வீடுகளில் து ணிகர திருட்டு நடந்துள்ளது.
அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சியில் உள்ள கமிட்டியார் காலனி நான்காவது தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 40. நல்லகட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர். இவரது மனைவி கோகிலவாணி 36, கருக்கன்காட்டுப்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை. இவர்களது வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளி அதே தெருவில் கோகிலவாணியின் தந்தை ஓய்வு பெற்ற நில அளவையர் சாமிநாதன், 58 மற்றும் அவரது மனைவி ருக்மணி, 60 வசிக்கின்றனர்.நேற்று ரமேஷ், கோகிலவாணி பணிக்கு சென்றனர்.
சாமிநாதன், மனைவியுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டனர்.மாலை வீடு திரும்பியபோது, இரு வீடுகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது தெரியவந்தது.ரமேஷ் வீட்டில் பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய், சாமிநாதன் வீட்டில் பீரோவில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. அவிநாசி பகுதியில், கடந்த ஒரே வாரத்தில் ஐந்து வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜவுளிக்கடையில் ரூ.23 லட்சம் அபேஸ்
கோவை:கோவையில், இரு இடங்களில் செயல்படும் பிரபல ஜவுளிக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வந்தவர் ஆனந்த். இவர், பணியில் இருந்த காலத்தில் பணம் வரவு -- செலவு பற்றி, கணக்கு பிரிவு மேலாளர் பிரகாஷ், 32, ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மொத்தமாக, 23 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆனந்த், வசூலித்த பணம், 11 லட்சத்து, 10 ஆயிரம், நிறுவன உரிமையாளர் கேட்பதாக கூறி எடுத்துச்சென்ற, 12 லட்சம் என, மொத்தம், 23 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலாளர் பிரகாஷ், உக்கடம் போலீசில் புகார் தெரிவித்தார். விசாரித்த போலீசார், ஆனந்தை தேடி வருகின்றனர்.
ரூ. 2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்
வேலுார்:ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம் குடியாத்தம் வனத்துறையினர் நேற்று காலை குடியாத்தம் அருகே கொட்டாலம் வன சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது ஆந்திரா மாநிலம் சித்துாரிலிருந்து வந்த காரை மடக்கியபோது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார்.
சோதனையில் காரில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து செம்மரக்கட்டைகள் இருந்தன.அதை குடியாத்தம் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. தப்பியோடிய டிரைவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.