பெங்களூரு : கர்நாடகாவின் கடலோர பகுதிகள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கன மழை நீடிக்கிறது. வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கின்றனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறு, ஏரி, கால்வாய்களில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
கர்நாடகாவின் உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, குடகு, ஷிவமொகா, ஹாசன், பெங்களூரு நகர், பெலகாவி, கலபுரகி, யாத்கிர் என, அனைத்து இடங்களிலும் மழை ஆர்ப்பரிக்கிறது. சாலைகள், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக தென்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை பறிகொடுத்து, விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.
* சிக்கபல்லாபூரில் பரவலாக மழை பெய்கிறது. பாகேபள்ளியில் உள்ள விளையாட்டு அரங்கம், சேறும், சகதியுமாக மாறியுள்ளது. விளையாட்டு அரங்கம் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ளதே, இதற்கு காரணம். தண்ணீர் பாய்ந்து செல்ல வழியில்லாததால், நீர் தேங்குகிறது. இங்கு நடக்க வேண்டிய விளையாட்டு போட்டிகள், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
* மாண்டியாவில் நேற்று முழுதும் அடைமழை பெய்ததில், ஏரி, குளம், குட்டைகள், ஓடைகள், கால்வாய், ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீரே தென்படுகிறது. பள்ளியிலிருந்து வீடு திரும்ப முடியாமல், மாணவர்கள் அவதிப்பட்டனர். பணி முடிந்து செல்வோரும் பரிதவித்தனர்.நகரின் அனைத்து சாலைகளும் மாயமாகி ஏரிகளாக மாறின. தண்ணீரில் வாகனம் ஓட்ட முடியாமல் மக்கள் திணறினர்.
ஏரி உடைந்து வெள்ளம் பாய்ந்ததால், பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏரி நீரை வேறு பக்கம் திருப்பி, வாகனம் செல்ல வழி வகுத்தனர்.
* மத்துார் ஏரி உடைப்பெடுத்ததால், மத்துாரின் கொல்லி சதுக்கம் வெள்ளக்காடானது. அங்கும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீரை வேறு பக்கம் திருப்பி, வாகன போக்குவரத்து நடந்தது. பீடி தொழிலாளர்களின் காலனியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகளில் இடுப்பு வரை தண்ணீர் வந்ததால், பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.மாவட்டத்தின் அனைத்து ஏரிகளும், அபாய எல்லையை தாண்டி பாய்கின்றன.
* உத்தரகன்னடாவும் மழையால் திணறுகிறது. பட்கலில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் நிறுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட படகுகள், அலையில் அடித்து செல்லப்பட்டன. பல படகுகள் உடைந்து சின்னாபின்னமாகின. 205 வலைகளும் பாழாகின.ஆகஸ்ட் 6ல், உத்தரகன்னடாவில், 20 செ.மீ.,க்கும் அதிகமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
இன்றும் கூட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பட்கலின், மூடபட்கல், சவுதனி, புரவர்கா கிராமங்களின் கிணற்றில், சேற்று நீர் நுழைந்து அசுத்தமடைந்துள்ளது. மன்குலி கிராமத்தில், மண்ணெண்ணெய் சேகரிப்பு இடத்தில், எண்ணெய் கசிந்து கிணற்றில் சேர்ந்துள்ளது. மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். சில இடங்களுக்கு மட்டும் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
துணிக்கடைகளில் வெள்ளம் புகுந்ததில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைகள் நீரில் நனைந்து பாழானதால், வியாபாரிகள் வருத்தமடைந்துள்ளனர்.
* துமகூரிலும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளது. மதுகிரியின், நாகலாபுரா கிராமம் அருகில், நேற்று முன்தினம் இரவு, ஓடையை கடக்க முற்பட்ட துவாரப்பா, 69, நீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடலை தேடுகின்றனர்.குனிகல்லின், தொம்பரஹட்டி பாலத்தில், நேற்று காலை பைக்கில் சென்ற அருண், பாலத்தின் மீது பாய்ந்தோடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
சிறிது தொலைவில், மரக்கிளையை பிடித்துக்கொண்டார். அவரை கிராமத்தினர், தீயணைப்பு படையினர் காப்பாற்றினர். பைக் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
* குடகிலும் மழை தாண்டவமாடுகிறது. இடி, மின்னலுடன் விளாசுகிறது. சில வீடுகளின் அருகிலேயே மண் சரிந்துள்ளதால், இங்கு வசித்த குடும்பத்தினர், உறவினர் வீட்டில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.மடிகேரி, பாகமண்டலாவின், சில இடங்களில் மண் சரிந்துள்ளது. மலைகள், குன்றுகளிலிருந்து சேற்று நீர் கீழே பாய்கிறது. பாகமண்டலா, கரிகே, தன்னமணி சாலைகளில், விழுந்த மண், கல், மரக்கட்டைகளை அப்புறப்படுத்துவதில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
* ஹாசன், ஸ்ரவணபெளகோலாவின், செக்கா கிராமத்தில் ஏரி உடைந்து, குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடொன்றில் தாயும், ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை உட்பட, ஐந்து பேர் அபாயத்தில் சிக்கினர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர், படகு உதவியுடன் அவர்களை, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர்.
மழைச்சேத பகுதிகளை, நேற்று மாலை அமைச்சர்கள் அசோக், கோபாலய்யா நேரில் சென்று பார்வையிட்டனர். ஸ்ரவணபெளகோலாவின், விந்தியகிரி மலையில், கற்கள் பெயர்ந்த இடத்தையும் பார்வையிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.