புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறையில், 48 சப் இன்ஸ்பெக்டர், 307 காவலர்கள் உட்பட 1044 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் 10,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை படிப்படியாக நிரப்பப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.இதன்படி முதல்கட்டமாக, காவல்துறையில் 390 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்நிலையில் காவல் துறையில் காலியாக உள்ள 1044 பணியிடங்கள் நேரடித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து காவல்துறை சிறப்பு அதிகாரி குபேரசிவகுமரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி காவல் துறையில் 390 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது, காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மேலும் 307 காவலர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும், 415 ஊர்க்காவல் படை வீரர்கள், கடலோர பாதுகாப்பை மேலும் பலப்படுத்த 200 கடலோரக் காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளது.துறையில் காலியாக உள்ள 48 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.இவை தவிர, 35 ஓட்டுநர்கள், 34 சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், சலவைப் பணியாளர்கள் மற்றும் 5 பியுகலர்கள் என மொத்தம் 1044 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.