புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றியபோது, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என பெண் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனது பூர்வீக நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருவதாகவும், அதனை மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒப்படைக்க வேண்டும் என புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றி யுவராஜிடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கோர்ட் அமீனா வெங்கட் தலைமையில் சர்வே துறை மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்று, கோர்ட் உத்தரவு நகலை காண்பித்து ஆக்கிரமிப்புகளை இடிக்க முயன்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் நக்கீரன், அவரது மனைவி சுதா மற்றும் குடும்பத்தினர் அமீனா வெங்கட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று சுதா, தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, வீடுகளை இடித்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.தொடர்ந்து, சுதா உள்ளிட்ட 3 பெண்களை போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.