புதுச்சேரி : நீட் மதிப்பெண் அல்லாத, கலை அறிவியல் மற்றும் தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, வரும் 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 4260 சீட்டுகள் உள்ளன. இது தவிர, நீட் மதிப்பெண் அல்லாத தொழில் படிப்பில், 4954 சீட்டுகள், நுண்கலை -90, லேட்ரல் என்ட்ரி பி.டெக்.,-403, உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் -190 சீட்டுகள் என மொத்தம் 10,804 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கு கடந்த மாதம் 8ம்தேதி முதல் சென்டாக் இணைய தளத்தில் (www.centac puducherry.in) விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டு இருந்தது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில், நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மூன்று நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி மாலை 6.௦௦ மணி வரை நீட் மதிப் பெண் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.லாஸ்பேட்டையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் ஆர்க்கிடெச்சுரல் அசிஸ்டண்ட்ஷிப், இ.இ.இ., - இ.சி.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பி.டெக்., படிப்புகள் உள்ளன.இந்த படிப்புகளுக்கு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.