வாலாஜாபாத்: சென்னையின், 2வது விமான நிலையமான பரந்துார் விமான நிலையத்திற்காக 12 கிராமங்களில், 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், 2,400 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். நிலம் கையப்படுத்த உள்ள இடங்களை விரைவில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

தாம்பரம் அடுத்த, மீனம்பாக்கம் பகுதியில், விமான நிலையம் இயங்கி வருகிறது. சென்னை சுற்றியுள்ள பல பகுதிவாசிகள் இங்கிருந்து விமான பயணம் செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு செல்வோர், நகர் மற்றம் புறநகரில் இருந்து சரியான நேரத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
'கிரின் பீல்டு ஏர்போர்ட்'குறித்தநேரத்திற்குள் செல்ல முடியவில்லை. இதை தவிர்க்க, மீனம்பாக்கம் பகுதியை ஒட்டி இருக்கும் பகுதிகளில், 'கிரின் பீல்டு ஏர்போர்ட்' என்னும் புதிய விமான நிலையம் துவக்குவதற்கு, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா பன்னுார் அல்லது காஞ்சிபுரம் தாலுகா பரந்துார் ஒட்டிய கிராமங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், படாளம் ஆகிய நான்கு இடங்களை மத்திய அரசிற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பார்லிமென்ட்டில், பரந்துார் பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளது என தெரிவித்து உள்ளார்.இந்த அறிவிப்பால், பரந்துார் மீனம்பாக்கம் போல சர்வதேத தரத்திற்கு, வளர்ச்சி பெறும் என கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுகுறித்து, பரந்துார் கிராமத்தினர் கூறுகையில், 'பரந்துார் கிராமத்தில், சென்னையின் 2வது விமான நிலையம் அமைய உள்ளது. இது, அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பு பெற்று உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி புரம் மாவட்டத்தில் இருந்து பல கி.மீ., துாரம் சென்று விமானத்தில் செல்வது இனி எளிதாக பயணம் செய்ய முடியும். அதற்கேற்ப பல கட்டமைப்பு வசதிகளும் மேம்பட வாய்ப்பு உள்ளது' என்றனர்.

பரந்துார் விமான நிலையத்திற்கு, 12 கிராமங்களில், 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், 2,400 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். மீதமுள்ளவை விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களாகும். பெரும்பாலான நிலங்கள், ஏரி நீர் பாசன வசதியுடன் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
நிலம் கையப்படுத்த உள்ள இடங்களை விரைவில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து விமானநிலைய பணிகள் துவங்க உள்ளன.எதிர்பார்ப்புவிவசாயம் செய்யும் நிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் என, பல தரப்பு நிலங்கள் வருவாய்துறை கையகப்படுத்த உள்ளது.
இதற்குரிய, இழப்பீடு தொகை முறையாக வழங்க வேண்டும் என, விவசாயிகள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், பலர் விளை நிலங்களை விமான நிலையத்திற்கு கொடுத்து விட்டு, வருமானதுக்கு தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.விமான நிலையத்திற்கு, நிலம் வழங்குவோரின் குடும்பத்திற்கு தலா ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
கையகப்படுத்த உள்ள கிராமங்கள்!
காஞ்சிபுரம் தாலுகா
*வளத்துார்
* பரந்துார்
*நெல்வாய்
*தண்டலம்
*மேல் பொடவூர்
*மடப்புரம்
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா
*எடையார்பாக்கம்
*குணகரம்பாக்கம்
*மகாதேவிமங்கலம்
*ஏகனாபுரம்
*அக்கமாபுரம்
*சிங்கல்பாடி