இரண்டு கைகளிலும் விரல்களில் நீளமான நகம் வளர்த்து அமெரிக்க பெண் டியானா ஆம்ஸ்ட்ராங் 63, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மின்னொசடா நகரை சேர்ந்த இவர் 25 ஆண்டுகளாக இரு கைகளில் உள்ள விரல்களில் நகத்தை வெட்டாமல் இருந்தார். 2022 மார்ச் 13ன் படி இதன் மொத்த நீளம் 42 அடி. இது சாதாரண பள்ளிப்பேருந்தின் நீளத்தை விட அதிகம். தன் பத்து விரல்களில் மிக நீளமானதாக வலது கை ஆள்காட்டி விரல் நகம் (4 அடி 6.7 இன்ச்) சிறியதாக இடது கை சுண்டு விரல் நகம் (3 அடி 7 இன்ச்) வைத்துள்ளார்.
1997ல் இவரது 16 வயது மூத்த மகள் லாடிசா ஆஸ்துமாவால் உயிரிழந்தார். அந்த துக்கம் காரணமாக அன்றிலிருந்து நகம் வெட்டுவதை நிறுத்தினார். இவரது இளைய மகள் ரெய்னா இவருக்கு உதவியாக இருக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை இவரது நகங்களுக்கு பாலீஸ் செய்ய 24 பாட்டில் நெய்ல்பாலீஷ் தேவைப்படும். பாலீஸ் செய்து முடிக்க 2 நாட்கள் ஆகுமாம்.
இதற்கு முன் நீளமான நகம் வளர்த்த பெண் என்ற சாதனையை அமெரிக்காவின் அயனா வில்லியம்ஸ் (18 அடி 8 இன்ச்) பெற்றிருந்தார். இவர் கடந்தாண்டு தன் நகங்களை வெட்டி விட்டார். இதுவரை நீளமான நகம் வைத்திருந்த அமெரிக்காவின் லீ ரெட்மாண்ட் (24 அடி 2009ம் ஆண்டு) சாதனையையும் டியானா முறியடித்தார்.