பெரம்பலூர்: பெரம்பலூரில், வாலிபரை ஓட, ஓட விரட்டி சென்று கத்தியால் குத்திக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை, பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர், தேவேந்திரகுலத் தெருவை சேர்ந்தவர் கோபால் மகன் வினோத்,28, இவர் பெரம்பலூரில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், இவரது நண்பரான பாரதியார் தெருவை சேர்ந்த துரை மகன் டிரைவரான கார்த்திக்,25, என்பவரும் நேற்று முன்தினம் இரவு தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு டூவீலர்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வினோத்தையும், கார்த்திக்கையும் கத்தியால் குத்தினர். இதனால் வினோத்தும், கார்த்திக்கும் படுகாயங்களுடன் தப்பியோடினர்.
ஆனால் மர்ம கும்பல் அவர்களை விடாமல் பின்தொடர்ந்து விரட்டினர். இதில், கார்த்திக் அந்தப்பகுதியில் உள்ள தெருக்களில் ஓடி தப்பிவிட்டார். ஆனால், வினோத் தோமினிக் பெண்கள் பள்ளியை கடந்து ஓடியபோது, சுற்றி வளைத்த மர்ம கும்பல் வினோத்தை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து டூவீலர்களில் தப்பியோடி விட்டது. இதில், படுகாயமடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கார்த்திக்கை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.