உழவர் சந்தை முன் கடை அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உழவர் சந்தை செயல்படுகிறது. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவர் சந்தைக்கு தங்களது விளைபொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
உழவர் சந்தைக்கு போட்டியாக, அங்குள்ள சாலையோரங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், கடும்
போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
உழவர்சந்தை எதிரில் வெளி
மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள், தக்காளி போன்றவற்றை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதிகாலை முதல் வாகனங்களில் காய்கறிகளை கொண்டுவந்து இறக்குவதால் உழவர்சந்தை அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது தற்காலிக சென்டர் மீடியான் அமைக்கப்பட்ட போது, சாலை இருபுறங்களில் கடை அமைத்து கொள்வதால் நெரிசல் குறைந்தபாடு இல்லை. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது, பள்ளி, கல்லூரி வாகனங்களும் நெரிசலில் சிக்கி தாமதமாகவே செல்கின்றன.
வெளியூர் வியாபாரிகள் கரூர் காமராஜ் மார்க்கெட்டிற்கு தான் வாகனங்களை கொண்டு சென்று காய்கறிகளை இறக்க வேண்டும். உழவர்சந்தை எதிரே வாகனங்களை நிறுத்துவது கடைகளை போட்டு விற்பனை செய்வது கூடாது. எனவே, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.