தற்காலிக பணியாளர் நீக்கப்பட்டதால், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கொசு மருந்து தெளிப்பது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிகமாக, 10 பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கடந்த, 7 ஆண்டுகளுக்கு மேல் இப்பணியில் உள்ளனர். இவர்களுக்கு தினசரி ஊதியமாக, 220 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென இவர்கள், 10 பேரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவர்களுக்கு பதில், வேறு பெண்களை நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்தது, வரி உயர்வை கண்டித்து நேற்று கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் இளங்கோ, மாநில இணைச்செயலாளர் சிவலிங்கம ஒன்றிய செயலாளர காசி மணி, பழனிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கண்டன பேரணி நடந்தது.