போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்பால், சாலையில் மழைநீர் தேங்கி, நேற்று பணிக்கு வந்த தனியார் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
போச்சம்பள்ளி அருகே சிப்காட் வளாகத்தில், 22 ஏக்கர் பரப்பளவுள்ள போக்கம்பட்டி ஏரி அமைந்துள்ளது. சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது இந்த ஏரியின் நீர்வரத்து ஓடை மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டது.
தற்போது பெய்து வரும் மழையால் ஏரியில் நீர் நிரம்பி, ஏரிக்கோடி வழியாக உபரிநீர் வெளியேற வழியின்றி, சிப்காட் சாலைகளில் இரண்டடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நேற்று காலை சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு சென்ற, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பாளேதோட்டம் கிராம மக்கள் கூறுகையில், 'போச்சம்பள்ளி சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியபோது போக்கம்பட்டி ஏரி நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்தனர். மேலும், நீர் வெளியேறும் ஏரிக்கோடி பகுதியையும் சிப்காட் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதால் தற்போது ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற வழியின்றி இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது' என்றனர்.