கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் வரலாற்றுத்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 15 நாட்கள் தொல்லியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மல்லசந்திரம் மற்றும் சின்ன கொத்துாருக்கு களப்பயணம் சென்றனர்.
இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:
உலகப்புகழ் பெற்ற மல்லசந்திரம் கல்திட்டைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவை, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாசாரத்தை சேர்ந்தது. 100க்கும் மேற்பட்ட கல்திட்டைகளில், மிகவும் உயரத்தில் உள்ள கல்திட்டை, நிலப்பகுதியின் தலைவன் என்ற உயரிய பதவியில் இருந்தவனுக்கு எடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் உள்ளது மக்களுக்கானது. ஒரு அடி அளவு கொண்ட கல்திட்டைகள் குழந்தைகளுக்கானது. இவற்றில் பெரும்பாலானவை கிழக்கு பக்கம் இடுதுளையுடன் கூடியவை. அடுத்ததாக சின்னகொத்துாரில், 13ம் நுாற்றாண்டு குந்தாணி அம்மன் கோவிலை பார்வையிட்டனர். இக்கோவிலை பிற்கால சோழர்கள், ஒய்சாளர்களுக்கு கீழ் ஆண்ட, பூர்வாதராயர்களால் கட்டப்பட்டது. கோவில் கட்டடக்கலை பற்றி அறிந்துக்கொள்ள இக்கோவில் சிறந்த உதாரணம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாறு ஆசிரியர் ரவி, கல்லுாரி பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரன், பிரிய லட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.