ஆத்துார், செல்லியம்பாளையம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. கடந்த, 2ல், இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, 91 பேர் மீது, ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்று, அ.தி.மு.க., நிர்வாகி சிவக்குமார், 44, என்பவரை, கைது செய்தனர்.
இரவு, 7:00 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், கோவிலை திறந்து பூஜை செய்தனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 11ல் காப்பு கட்டுதல், 21ல் தேர் திருவிழா நடத்துவதாக, ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். இதுகுறித்து, அ.தி.மு.க.,
ஒன்றிய செயலர் ரஞ்சித்குமார் கூறுகையில், 'தி.மு.க.,வுக்கு ஆதரவாக, போலீசார் செயல்படுகின்றனர். ஒருதரப்பினர் விழா நடத்துவது குறித்து கலெக்டர் விசாரிக்க வேண்டும்' என்றார்.
போலீசார் கூறுகையில், 'மக்கள் சார்பில் விழா நடத்துவதாக கூறினர். பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படவில்லை; இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம்' என்றனர். இப்பிரச்னையில் காயமடைந்த தி.மு.க., நிர்வாகிகள், 4 பேர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.