''திடக்கழிவு மேலாண் திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது,'' என, திடக்கழிவு மேலாண், மாநில கண்காணிப்பு குழு தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் வழியே செல்லும் வசிஷ்ட நதி, பைத்துார் சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கு, முல்லைவாடி, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், திடக்கழிவு மேலாண்மை, மாநில கண்காணிப்பு குழு தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திடக்கழிவு மேலாண்
திட்டத்தில், ஈரோடு மாநகராட்சி சிறப்பாக பணி மேற்கொண்டு முதலிடத்தில் உள்ளது. வேலுார், கும்பகோணம், மதுரை மாநகராட்சிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. நகராட்சிகளில் பூந்தமல்லி முதலிடத்தில் உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில் தான் குப்பை அதிகளவில் உள்ளது. ஊராட்சிகளில் குப்பை குறைவு தான்.
கோவை, சென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் பெருங்குடி, வியாசர்பாடியில் சரிசெய்தால் பெரும் பாதிப்பு குறையும். இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். திடக்கழிவு மேலாண் திட்டத்தில் சரியாக பணி
செய்யாதோர் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கிறோம். இதுவரை, 5 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
ஆத்துார், நரசிங்கபுரம் வழியே செல்லும் வசிஷ்ட நதியில் நகராட்சி கழிவு நீர், குப்பை கொட்டக்கூடாது என, நகராட்சி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்களுக்கு எச்சரித்துள்ளோம். தெரு, சாலை, நீர் நிலையை சுத்தமாக வைத்துக்கொள்ள கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வசிஷ்ட நதியை ஆய்வு செய்து மாற்று நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆத்துார் நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, கமிஷனர் வசந்தி
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.