டாலர், நகை அனுப்புவதாக மோசடி ஆசாமி கூறியதை நம்பி, திருப்பூரை சேர்ந்த பாத்திரக்கடை உரிமையாளர், ரூ.16 லட்சம் இழந்தார்.
திருப்பூர், வளையங்காடு, ஏ.வி.ஜி., நகரை சேர்ந்தவர் மணிவண்ணன், 32; பாத்திரக் கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம், இவருடன், 'பேஸ்புக்' வாயிலாக, லண்டனில் இருந்து பேசுவதாக ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பிரிட்டனில் இருந்து டாலர், நகைகளை பரிசாக, பார்சல் வாயிலாக அனுப்பியுள்ளதாக அந்த ஆசாமி கூற, மணிவண்ணன், முதல் கட்டமாக, 30 ஆயிரம் ரூபாயை அனுப்பினார்.
இந்நிலையில், மணிவண்ணனின் மொபைல் எண்ணுக்கு, டில்லி விமான நிலையத்தில் இருந்து, சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறிய ஒருவர், 'லண்டனில் இருந்து உங்களுக்கு சட்டவிரோதமாக பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன; இதை பாதுகாப்பாக பெற, குறிப்பிட்ட தொகையை தர வேண்டும்' என மிரட்டியுள்ளார்.
அடுத்த நாள், போலீஸ் என ஒருவர் அறிமுகமாகி, இதேபோன்று மிரட்டியுள்ளார். பயந்துபோன மணிவண்ணன், பல கட்டமாக, 16 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பினார். பார்சல் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்ததையடுத்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'வங்கியில் இருந்து பேசுவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும், பல வகையில் ஏமாற்று பேர்வழிகள் தொடர்பு கொண்டு பேசுவர். யாரையும் நம்பி பணம், வங்கி விபரம் உட்பட எதையும் தெரிவிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றனர்.