மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் நிரந்தர தடுப்புச் சுவர் மற்றும் தடுப்பணை அமைக்கப்படும் என கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் வழியே தற்போது 1.75 லட்சம் கன அடி உபரி நீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது. மாலைக்குல் 2.25 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட அளக்குடி கிராமத்தில் 3000 மணல் மூட்டைகள் 300 சவுக்கை கட்டைகள் கொண்டு பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், கடந்த காலங்களில் உபரி நீர் திறக்கப்பட்ட போது ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாதவாறு தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட. தடுப்பணை அறிவிப்பு அரசாணை வெளியிடாமலும் நிதி ஒதுக்கீடு செய்யாமலும் பெயரளவில் மக்களுக்காக அறிவிக்கப்பட்ட வெற்று அறிவிப்பு. தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகும் அளக்குடியில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கவும், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீரை தேக்குவதற்காக தடுப்பணை மற்றும் கதவணை அமைக்கவும் முதல்வரிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.