புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும் போது அல்லது மற்ற நேரங்களில், கிரிமினல் வழக்குகளில் விசாரணை அமைப்புகளின் சம்மனை எம்.பி.,க்கள் தவிர்க்க முடியாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பணமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் உள்ளனர். சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இது பார்லிமென்டிலும் எதிரொலித்தது. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது எனக்கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

பார்லிமென்ட் அலுவல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவதாக காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே ராஜ்யசபாவில் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலடி தந்த ராஜ்யசபா முன்னவரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல், ''சட்டத்தை அமல்படுத்தும் எந்த அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அரசு தலையிடவில்லை. ஒருவேளை நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, அது போன்ற காரியங்களை செய்திருக்கலாம்,'' என்றார்.

இந்நிலையில், ராஜ்யசபாவில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தாக்கல் செய்த அறிக்கை:, பார்லிமென்ட் நடந்து கொண்டிருக்கும் போது அல்லது மற்ற நேரங்களில், கிரிமினல் வழக்குகளில் விசாரணை அமைப்புகளின் சம்மனை எம்.பி.,க்கள் தவிர்க்க முடியாது. சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன்கள் என்ற அடிப்படையில், சட்டம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மதித்து நடக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு அந்த அறிக்கையில் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.