சிம்லா: உக்ரைன் பொண்ணும், ரஷ்யாவின் மாப்பிள்ளையும் இமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

கடந்த பிப்.,மாதத்தில் ரஷ்யா-உக்ரைன் இடையே சண்டை மூண்டன. ஐந்து மாதங்களை கடந்த பின்னரும் சண்டை ஓய்ந்தபாடில்லை. இரு நாடுகளின் அரசுகளிடையே அரசியல் ரீதியாக சண்டை நடந்து வந்தாலும் இரு நாட்டு மக்களிடையே அன்பு என்றும் மாறாமல் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
அதற்கு உதாரணமாக திகழ்ந்துள்ளது இன்று ( ஆக.,5 ம் தேதி ) தர்மசாலாவில் நடந்துள்ள திருமணம். ரஷ்யாவை சேர்ந்தவர் செர்ஜி நோவிகோவ் இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான எலோனா பிரமோகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனாலும் இருநாடுகளிடையேயான போர் இவர்களின் திருமணத்திற்கு தடையாக அமைந்திருந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் அமைந்துள்ள திவ்யா ஆசிரம கஹ்ரோட்டாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது மணமக்கள் இந்து பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் தரப்பில் இருந்தும் குறிப்பிட்ட அளவில் உறவினர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பண்டிதர் ஒருவர் திருமண மந்திரங்கள் கூறுதல், அக்னியை வலம் வருதல் போன்றவற்றை முறைப்படி செய்து திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

இது சம்பந்தமான வீடியோ சமூக வலை தளங்களில் வலம் வந்ததை அடுத்து பல்வேறு தரப்பினரும் இந்து முறைப்படியான திருமணத்திற்கு வரவேற்று, மணமக்களான புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.