சேலம்:வரிசை கட்டும் பண்டிகைகளால், ஆம்னி பஸ்களை இயக்க, 'பர்மிட்' புதுப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு முன் வரை, 6,350 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன.
தயக்கம்
தொழிலில் ஏற்பட்ட பாதிப்பால் பிரபல நிறுவனங்கள், பஸ்களை இயக்க தயக்கம் காட்டுகின்றன. இந்நிலையில், 20க்கும் குறைவான ஆம்னி பஸ்களை கொண்டுள்ள உரிமையாளர்கள், தொழிலை தொடர பஸ்களை இயக்கி வருகின்றனர்.
கடந்த மாத நிலவரப்படி, தமிழகத்தில், 1,800 ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன.ஆக., 9ல் மொஹரம், 15ல் சுதந்திர தினம், 19ல் கிருஷ்ண ஜெயந்தி, 31ல் விநாயகர் சதுர்த்தி என பண்டிகைகள் வரிசையாக வருகின்றன.
இந்த பண்டிகைகள், சனி, ஞாயிறை ஒட்டி வருவதால், பயணியர், சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட வசதியாக, தற்போது பஸ், ரயில்களில் முன்பதிவு செய்ததால், 90 சதவீத முன்பதிவு முடிந்துள்ளது.
இதை அறிந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட, ஆம்னி பஸ்களை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டு வரத் துவங்கி உள்ளனர்.அதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம், பகுதி நேர அலுவலகங்களில், கடந்த, மூன்று நாட்களில் மட்டும், 600 ஆம்னி பஸ்களுக்கு, 'பர்மிட்' கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அபூர்வம்
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், 'பர்மிட் பெற, கடந்த மாதம் வரை, மாதம், 30 விண்ணப்பங்கள் வருவதே அபூர்வம்.'தற்போது பண்டிகை சீசன் தொடங்குவதால், 600 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளன' என்றனர்.