ஊத்துக்கோட்டை:சாலையில் திரியும் மாடுகளை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டு களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
சென்னை -- திருப்பதி நெடுஞ்சாலையில் இவ்வூர் உள்ளதால், போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இங்குள்ள பஜார் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.பஜார் பகுதியில் சிலர் மாடுகளை வளர்க்கின்றனர். அவர்கள் மாடுகளை வீடுகளில் கட்டி தீனி போட்டு வளர்ப்பதில்லை. காலை, மாலை இரண்டு வேளைகளில் சாலையில் தீனிக்காக விடுகின்றனர்.
பஜார் பகுதியில் உலா வரும் மாடுகளை வியாபாரிகள் விரட்டும் போது மாடுகள் தறிகெட்டு ஓடுகிறது. இதனால் எதிரில் வரும் பாதசாரிகள் காயம் அடைகின்றனர்.சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் ஊத்துக்கோட்டை பேரூராட்சி சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டுவது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.